எல்லையில் கடும் பதற்றம்...! 50 இந்திய இராணுவ வீரர்களை கொன்றதாக அறிவித்த பாகிஸ்தான்
புதிய இணைப்பு
எல்லைப் பகுதியில் 50 இந்திய இராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டில் (LOC) நடந்த மோதல்களில், இந்தியாவின் 40 முதல் 50 வரையான சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் (Attaullah Tarar) தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தேசிய சபையில் (நாடாளுமன்றத்தில்) உரையாற்றும் போது சற்றுமுன் அவர் இதனை தெரிவித்தார்.
இதுவிடயம் குறித்து இந்தியா இதுவரை எந்த மறுப்பு அறிக்கைகளையும் வெளியிடவில்லை.
முதலாம் இணைப்பு
இந்தியா (India) - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரைத் (Jammu and Kashmir) தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான யாரைப் பார்த்தாலும் அவர்களை சுட இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் ஒன்று கூட தடை
எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு மாநிலங்களிலும், காவல்துறையினரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறையினருக்கு வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பதில் தாக்குதல்
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.
நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அதிரடியாக நுழைந்து அங்குள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தது.
பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
13 இந்தியர்கள் உயிரிழப்பு
ஒபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேவேளை, காஷ்மீர் (Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
