தமிழக முதல்வர் விஜயிடம் இலங்கை அரசின் முக்கிய கோரிக்கை
இலங்கையின் வடக்கு கடற்பரப்பு பிரச்சினையைத் தீர்க்க, தமிழக கடற்தொழிலாளர்களின் அடிமட்ட இழுவலை முறையை நிறுத்தக் கோரி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யிடம் இலங்கை கடற்றொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்று (14.05.2026) செய்தியாளர்களிடம் பேசிய போதே இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள இந்த அழிவுகரமான கடற்றொழில் முறை, வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் கடுமையாக பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக நீடிக்கும் கடற்றொழில் மோதல்
இந்த கடல்வளப் பிரச்சினையை மோதல் வழியாக அல்லாது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளில் தீர்க்க விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்காக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்திக்க தமிழ்நாட்டிற்கு வரத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாக்கு நீரிணை பகுதியில் நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த கடற்றொழில் மோதல், வடக்கு இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |