சிங்கள மக்களின் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவு - சாணக்கியன்
தமிழர்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவளிக்காத போதும், சிங்கள மக்களின் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் காலி முகத்திடல் பக்கம் சென்றால் சுவையான உணவு உண்டுவிட்டு வரலாம். சமிந்த லக்சான் என்ற இளைஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்ததையிட்டு கவலையடைகிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த அரசாங்கத்தின் படுகொலையினை 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எதிர்கொண்டு வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அளுத்கம, திகன, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினர் இந்த நிலைமையை எதிர்க்கொண்டுள்ளார்கள். அக்காலப்பகுதியில் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தற்போது கவலையடையப் போவதில்லை.
மனிதப் படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது.
அதற்கு மேலதிகமாக ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் ஊடாக கத்தோலிக்க மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். அரசாங்கத்திற்கு படுகொலை செய்யமட்டுமே தெரியும், லசந்த விக்ரமதுங்க, ரதுபஸ்ஸ, வெலிகட உள்ளிட்ட பல படுகொலைகள், தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
படுகொலை செய்வதும், படுகொலை செய்தவர்களை விடுவித்து விடுதலை செய்வதை மாத்திரம் அரசாங்கம் நன்கு அறியும். 5 வயது பிள்ளை உட்பட 6 பேரை கொலை செய்த சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே ஆட்சிக்கு வந்தீர்கள். விடுதலையாக்கியுள்ளீர்கள். தற்போது வீடு செல்லுங்கள்.
வடக்கு கிழக்கு மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதனை காட்டிலும் முக்கிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். காணாமலாக்கப்பட்டோரது உறவினர்கள் 1500 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
தனது ஆட்சி காலத்தில் எவரும் மரணமடையவில்லை என முன்னாள் அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆட்சியில் தான் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் தான் அதற்கு பொறுப்பு.
2018 ஆம் ஆண்டு திருட்டுத்தனமான முறையில் மஹிந்த ராஜபக்சவை யார் பிரதமராக்கியது. இன்று குழந்தை போல் எதிர்தரப்பினர் பக்கம் அமர்ந்துள்ளார். அவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
கழுத்துப் பட்டி அணிந்தவர்கள் வீதிக்கு இறங்க முடியாமல் போயுள்ளது. முடிந்தால் தற்போது காலி முகத்திடலுக்கு சென்று வர முடியுமா என சவால்விடுகிறேன்.
அவர்களுக்கு வீதியில் செல்ல முடியாது. ஆளும் தரப்பினர் எவருக்கும் வீதிக்கிறங்கிச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது” என்றார்.
