கெஹெலியவிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : காவிந்த ஜயவர்தன வலியுறுத்து
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நம்பிக்கையில்லா பிரேரணை
“முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான எம்மால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அன்று அதில் நாம் குறிப்பிட்ட காரணிகள் உண்மை என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது.
அது மாத்திரம் போதாது. எம்மால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் மாற்றப்பட்டுள்ள போதிலும், அவருடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவரும் மாற்றப்படவில்லை.
இவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கேள்வியெழுப்புகின்றோம்.
அப்பாவி மக்களின் வரிப்பணமே இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 65 000க்கும் அதிகமான சிறுவர்கள் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவை தொடர்பில் தற்போதைய சுகாதார அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.