எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார் ரணில் (படங்கள்)
இரண்டாம் இணைப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றடைந்துள்ளார்.
இந்த நிலையில், அதிபர் இலங்கையில் இல்லாத காரணத்தினால், அவரது அமைச்சு பொறுப்புக்களை நிர்வகிக்க இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
டுபாய்க்கு சென்ற அவர், அங்கிருந்து பிரித்தானியாவை சென்றடைந்துள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பதில் அமைச்சர்கள் நியமனம்
இதேவேளை, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது இலங்கையில் இல்லாத காரணத்தினால், அவரது அமைச்சுப் பொறுப்புக்களை நிர்வகிக்க இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன், பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிடிய, பதில் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூகவூட்டல் அமைச்சராக கீதா குமாரசிங்க, பதில் தொழில்நுட்ப அமைச்சராக கனக ஹேரத் மற்றும் பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள, மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.