பிரதமர் நியமனத்தின் பின்புலம்! அம்பலப்படுத்திய பொன்சேகா
அரச தலைவர் தன்னை அழைத்து பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் ஆனால் சில நிபந்தனைகளை முன் வைத்து தான் அதை ஏற்காத காரணத்தினாலேயே இன்று பிரதமராக ரணில் இருக்கிறார் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடன் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுப்பது ஆபத்து
மேலும் நாட்டின் நெருக்கடி நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைவதாக தெரியவில்லை .
நெருக்கடிகளை கடனை பெற்று தீர்க்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் .
ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கடன் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்காது இங்கு விவசாயத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலை ஒழிக்க நடவடிக்கை
அதேபோல் இன்னும் நாட்டில் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரச நிறுவனங்களில் இன்னும் ஊழல்கள் தொடர்கின்றன. இதேவேளை பிரதமர் இந்த சபையில் என்னைப்பற்றி நக்கலடித்து கருத்தை முன்வைத்துள்ளார்.
பிரதமருக்கு ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன் நீங்கள் இப்போது அந்த ஆசனத்தில் இருப்பதற்கு புண்ணியம் எனக்கே கிடைக்க வேண்டும்.
உங்களை அழிப்பதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்பு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச என்னை அழைத்திருந்தார்.
அப்போது பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் நான் அவருக்கு சில நிபந்தனைகளை முன் வைத்தேன். அதற்கு எனது கட்சி பெரும்பான்மை அனுமதி கிடைத்தால் மாத்திரம் அதை செய்வதாகவும் கூறி இருந்தேன் என்றும் உங்களுக்கு அந்த ஆசனம் கிடைக்க நானே வழி ஏற்படுத்தி உள்ளேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
