பௌத்தத்தை பாதுகாக்க ரணில் எடுக்கவுள்ள நடவடிக்கை
இலங்கையில் தேரவாத பௌத்தத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இதனை எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையை வழங்குவதாகவும் நேற்று நடைபெற்ற சிங்கள நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தம்மசதகனீப்பகரண
புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்பு பேரவையின் 28ஆவது நூலாக சிங்கள தம்மசதகனீப்பகரண வெளியிடப்பட்டுள்ளது.
7 நூல்களைக் கொண்ட அபிதர்ம பிடகத்தின் முதல் நூலின் முதற் பிரதியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதிபரிடம் கையளித்துள்ளார்.
அத்துடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட மஜ்ஜிம நிகாய 3, சன்யுக்த நிகாய 1, அங்குத்தர நிகாய 3, குத்தக நிகாய 1, ஜாதக பாலி 1 ஆகிய 5 நூல்களும் இதன் போது ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சிங்கள மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மேற்படி நூல்களை ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியுமெனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
