யுத்தக் குற்றம், இனப்பிரச்சினை தீர்வு - யாழில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட ரணில்
இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கு சிறிலங்கா இராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அதிபர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பகிரங்க அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம்
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நல்லிணக்கத்தை காண்பித்தே இந்த நிகழ்வின் இறுதி நடனம் இடம்பெற்றிருந்தது. நல்லிணக்கம் இந்த நாட்டிற்கு அவசியமாகும். 25 , 30, 40 ஆண்டுகளாக யுத்தம் இருந்தது. கலகம் இருந்தது.
அதேபோன்று அரசியல் ரீதியான பிரிவினைவாதம், இனவாத அரசியல் மத வாத அரசியல், வங்குரொத்து அரசியல் ஆகியவற்றால் எமது நாடு பிளவுபட்டுள்ளது.
நாம் அனைவரும் ஒரு நாட்டில் வாழ்வதனால், ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதால், இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்பதனால், ஒரே நாடு என்ற வகையில் நாம் மீண்டும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய சிறிலங்காவின் தனித்துவம் நோக்கி பயணிப்போம்.
ஆகவே இந்த தருணத்தில் இந்த மேடையில் எனக்கு தைப்பொங்கல் பண்டிகையே நினைவுவந்தது. நெருப்பின் மேல் பானை வைக்கப்படுகின்றது.நீர் ஊற்றப்படுகின்றது. பால் ஊற்பபடுகின்றது. அரிசி போடப்படுகின்றது.சக்கரை போடப்படுகின்றது. இறுதியில் பொங்கல் வருகின்றது.
இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் சிங்களவர்களை போடுவோம், தமிழர்களை போடுவோம், முஸ்லிம்களை போடுவோம். பறங்கியர்களையும் போடுவோம். தனித்துவமான இலங்கையை உருவாக்குவோம்.
தமிழ் மக்களது பிரச்சினை
சில பிரச்சினைகள் குறித்து வடக்கிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் பேச்சு நடத்திவருகின்றோம்.
நான் நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்தேன்.நாம் மீண்டும் இந்த நாட்டை ஒன்றிணைக்க பணியாற்ற வேண்டும் என அனைவரிடமும் கூறினேன்.
நல்லிணத்தை மீண்டும் ஏற்படுத்துவோம் என நான் குறிப்பிட்டேன். நான் நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டவுள்ளேன். பெப்ரவரி 8 ஆம் திகதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை கூறுவேன்.
இந்த பிரச்சினையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அல்லது தாமதப்படுத்தி கால்பந்து போன்று அடித்து விளையாடி தீர்க்க முடியாது.
தீர்வு என்ன என்பதை நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் கூற வேண்டும்.ஆகவேதான் முதலில் நாடாளுமன்றத்தின் கருத்தை கேட்கவுள்ளேன். நாம் பல பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம்.
நடந்தது என்ன?
காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்.
அதேபோன்று இது தொடர்பில் ஆராய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் அமைக்கவுள்ளோம். விசேடமாக என்ன நடந்தது ? யாரேனும் தவறு செய்துள்ளார்களா என்பதை இந்த ஆணைக்குழு ஊடாக ஆராயவுள்ளோம்.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கவுள்ளோம். இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன என இராணுவ கட்டளை தளபதியிடம் நாம் வினவினோம். உண்மையை கண்டறிய தாமும் விரும்பத்துடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எமக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நாம் கொண்டுவருவோம்.
இது வடக்கிற்கு எதிராக பிரயோகிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். எனினும் இது நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கே பிரயோகிக்கப்படுகின்றது.இதனை கடந்த ஆண்டு தெற்கிற்கு பிரயோகிக் வேண்டி ஏற்பட்டது” - என்றார்.