அந்நிய செலாவணியை ஈட்ட ரணிலின் மற்றுமோர் அஸ்திரம் ..! வகுக்கப்பட்ட மாற்று வியூகம்
சிறிலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக நாட்டினுள் அந்நிய செலாவணியை கொண்டுவர ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன்படி, தற்பொழுது சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசா காலம் நீடிப்பு / விசா கட்டணத்தில் மாற்றம்
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் விசா அனுமதி காலத்தை 270 நாட்கள் முதல் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் விசா கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 180 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 245 அமெரிக்க டொலர்கள் 35 டொலர்கள் வரை குறைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஓராண்டு நுழைவு சுற்றுலா விசாவிற்கான கட்டணம் 685 டொரில் இருந்து 200 டொலராக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
ரணிலின் திட்டம்
கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக சீர்குலைந்துள்ள சுற்றுலாத்துறை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தாக்கல் செய்த சிறப்பு அமைச்சரவை யோசனைக்கு அமைய இந்த விசா கட்டண குறைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.