zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்த ரணில்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளால் zoom தொழிநுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணையின் போது, ரணில் விக்ரமசிங்கவின் விரிவான மருத்துவ அறிக்கையை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு சற்றுமுன்னார் zoom மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் செய்ததாகக் கூறி தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டதன் மூலம் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நீதிமன்றம் தெரிவித்தால், இன்று (26) நடைபெறும் நடவடிக்கைகளில் அவரை zoom மூலம் இணைக்க சிறைச்சாலைகள் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிய பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

