முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க, நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, மேல் மாகாணத்தை, குறிப்பாக கொழும்பை மாத்திரம் அடிப்படையாக கொண்டு இலங்கையின் தேசிய பொருளாதாரம் அமைந்திருக்க கூடாது. இலங்கையில் பல பாகங்கள் உள்ளன.
இதன்படி, தென் மற்றும் மத்திய மாகாணங்களை உள்ளிட்ட அனைத்து மாகணங்களையும் மையப்படுத்தி தேசிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இதன்படி, வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும்.
மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன.
அதிகாரப்பகிர்வு
வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும். இதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது.
அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது என நினைக்கின்றோம்.
கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |