வரவு இல்லாத ரணிலின் 2024 பட்ஜெட் : இலங்கையின் அபாய நிலையை சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில! (காணொளி)
சிறிலங்கா அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் செலவுகள் மாத்திரம் காணப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் எதுவும் குறித்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வரவு இல்லாது செலவை மாத்திரம் உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டம் இதுவெனவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் வரவு செலவு திட்டம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் முதலாவது வரவு செலவு திட்டம் கடந்த 1947 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்தனவால் முன்வைக்கப்பட்டது.
வரவுக்கும் செலவுக்கும் ஒரு இடைவெளி உள்ளது. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து அதன் போது கூறப்பட்டது.
அத்துடன், வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் செலவுகளை ஈடு செய்வதே வரவு செலவு திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
வரவு செலவு திட்டம்
இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 3 ஆயிரத்து 900 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை காணப்படுகிறது.
எனினும், அதனை ஈடு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவில்லை.
புதிய வரிகளை அறிமுகப்படுத்தவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கடன் திட்டம்
சிறிலங்கா அரசாங்கம் மேலும் பல கடன்களை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த கடன்களை கொண்டு மக்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு கடன் வழங்க யாரும் முன்வர மாட்டர்கள் என்பதை சிறிலங்கா அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் கற்பனைக் கதைகளே” என தெரிவித்துள்ளார்.