ரவிராஜின் கொலைக்கான நீதியும் அரசியல் தீர்வும்....
வரலாறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பேரினவாத அரசும் அதன் ஆதரவாளர்களும் தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களை அடக்கும் செயற்பாடுகளை இன்றும் கைவிட்டபாடில்லை.
அவ்வாறுதான் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மனித உரிமை சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை செய்யப்படுவதற்கு முதல் நாளான கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினர் வாகரை மீது நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடராஜா ரவிராஜ் பங்கேற்றிருந்தார்.
அதன்பின்னர் அடுத்த நாளான நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இன்று போலொரு நாளில் காலை சிங்கள தொலைக்காட்சியொன்றில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி, நேர்காணல் ஒன்றை வழங்கிவிட்டு திரும்பிய நடராஜா ரவிராஜ், காலை 8.45 அளவில் கொழும்பு நாராஹென்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
நடராஜா ரவிராஜ்ஜின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூன்று கடற்படையினர் உட்பட ஐந்து சந்தேகநபர்களும் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற மிக நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அதிகாலை 12.15 அளவில் வழங்கியிருந்தார்.
முன்னாள் அதிபர் ஆட்சிபீடமேறிய பின்னர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவுபெறுகின்ற போதிலும் இதுவரை எந்தவொருவருக்கும் குற்றத்திற்கான பொறுப்புகூறலின் கீழ் தண்டனை பெற்றுத் தரப்படவில்லை.
தமிழர் என்ற புறக்கணிப்பும், சிங்கள பேரினவாதத்தை குற்றவாளியாக்க விரும்பாத சிறிலங்கா அரச இயந்திரம் மனப்பான்மையுமே இந்த நீதி மறுப்புக்கு பின்னால் இருப்பதாக கரிசனைகளை முன்வைக்கப்படுகின்றன.
கொலையொன்றுக்கே நீதியை மறுக்கும் சிங்கள பேரினவாத அரசு, இணைந்த வழக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையுடன் தீர்வை வழங்குவதில் எவ்வாறு ஆத்மார்த்தமாக செயற்படும் என்பது இன்றும் ஈழத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களின் ஒரே கேள்வியாக காணப்படுகின்றது.