பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பணிப்புரைக்கமைய ஆசிரியர் நியமனங்களுக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (25) இடம்பெற்ற வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர், ”ஆசிரியர் பதவிக்கான போட்டிபரீட்சையில் 3000 பேர் தோற்றிய போதிலும், அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்படுகிறது.
அதிபர் பணிப்புரை
எனினும் அதிபரின் பணிப்புரைக்கு அமைய இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு எஞ்சிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாகுறை நிலவுகின்றது. யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மாணவர்களின் உளநலம் தொடர்பில் சிந்தித்து, புதிய தொழில்நுட்ப முறைகளை கையாண்டு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்க்காத புதிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு உங்களிடம் காணப்படுகின்றது.” என தெரிவித்தார்.
ஆசிரியர் நியமனம்
வடக்கு மாகாண கல்வித் துறைக்குள் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் நேற்று (25) வழங்கப்பட்டது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran), தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran), வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண அவைத்தலைவர், பட்டதாரிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |