மட்டக்களப்பில் தடைப்பட்டுள்ள போக்குவரத்து சேவை: உழவு இயந்திரங்களில் பயணிக்கும் மக்கள்
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) மழை ஓய்ந்துள்ள போதிலும் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்து மார்க்கங்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.
இதனால் அத்தியாவசிய தேவைக்காக மக்கள் உழவு இயந்திரங்களில் பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது. தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் சற்று ஓய்ந்துள்ளது.
எனினும் வெள்ள அனர்த்தம் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்கும், எழுவாங்கரைப் பகுதிக்குமான தரைவழிப்போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவை
மண்டூர் குருமண்வெளி படகுப்பாதை, குருக்கள்மடம் அப்பிளாந்துறை படகுப்பாதை, போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பட்டிருப்பு, வெல்லாவெளி பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, செங்கலடி பதுளை வீதி, மங்கும் கிரன் பிராதான வீதி என்பன முற்றாக வெள்ளநீரினால் மூழ்கியுள்ளதகால் போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உழவு இயந்திரங்களில் ஒருசிலர் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெல்லாவெளி மண்டூர், வெல்லாவெளி திவுலானை, பெரிபோரதீவு பழுகாமம், உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மக்களின் உள்ளுர் போக்குவரத்துக்கும் தடைப்பட்டுள்ளன.
களுதாவளை, தேற்றாத்தீவு, களுவாஞ்சிகுடி, பழுகாமம், வெல்லாவெளி, போரதீவு, பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதுடன், மாவட்டத்திலுள்ள உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கித்துள்வெவ, வெலிக்காக்கண்டிய, கட்டுமுறிவு, உறுகாமம், தும்பங்கேணி, உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசன பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவைகள் மற்றும் தனியார் இலங்கை போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடை மழை காரணமாக கொழும்பு (Colombo) மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மட்டக்களப்பு கொழும்பு பிரதான புகையிரத வீதி புணாணைப் பகுதியில் புகையிரத தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து நேற்றிரவு (26.11.2024) மட்டக்களப்பு பொலன்னறுவை வரை மட்டுமே புகையிர சேவை முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து சேவைகள்
இதனால் மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உன்னிச்சை குளத்திலிருந்து மேலதிக நீர் திறந்து விடப்பட்டதனால் கொழும்பு மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டு நகரில் இருந்து தன்னாமுனை வரையிலான பகுதிகளில் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முற்றாக பாதிப்பு
இதனால் மட்டக்களப்புக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் வீதிகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
மஹியங்கணை அம்பாறை ஊடாக திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த மக்கள் திரும்பிச் செல்ல முடியாமல் வீதிகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் இருந்து புகையிரது சேவைகள்மற்றும் தனியார் இலங்கை போக்குவரத்து பேரூந்துகள் சேவைகள் உள்ளிட்ட அனத்து போக்குவரத்து சேவைகளும் தடைபட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக பெய்துவரும் அடைமழை வெள்ளத்தினால் 4450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4001 குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளர் இதில் 2668 குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமைந்துள்ளதுடன் 28 இடைதாங்கள் முகாம்களில் 1333 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்துள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் தகுந்த ஏற்பாடுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அனுபவமற்ற தன்மை
சூறாவளிக்கான முன்னறிவிப்பு 3 நாட்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவு எம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வோம். மேலும் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மக்களுடன் மக்களாக நின்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம்.
மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் படுவான்கரையிலுள்ள தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாது என தெவித்தனர்.
இதன்போது என் தலையீட்டினால் படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பினை மேற்கொண்டு பேரூந்து சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதன் ஊடாக புதிய அரசாங்கத்தினுடைய அனுபவமற்ற தன்மை இங்கு உறுதியானது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |