காசாவில் ஐ.சி.ஆர்.சி வாகன தொடரணி மீது தாக்குதல்
காசாவில் மனிதாபிமான உதவிப்பொருட்களை கொண்டு சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)வாகனத் தொடரணி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பாரவூர்திகள் சேதமடைந்துள்ளதுடன் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவ பொருட்களை கொண்டு சென்றவேளை
பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் அல்-குட்ஸ் மருத்துவமனை உட்பட, "சுகாதார வசதிகளுக்கு உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை" வழங்குவதற்காக ஐந்து பாரவூர்திகள் மற்றும் இரண்டு வாகனங்கள் கொண்ட ஒரு தொடரணி சென்று கொண்டிருந்தபோது, தாக்குதலுக்கு இலக்காகியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான காரணத்தை மனிதாபிமான அமைப்பால் உடனடியாக கண்டறிய முடியவில்லை. அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மருத்துவப் பொருட்களை வழங்குவதை உறுதிசெய்ய, சம்பவத்திற்குப் பிறகு தொடரணி செல்லும் வழியை மாற்றியதாக அது மேலும் கூறியது.
கடினமான பணி
தொடரணி பின்னர் ஆறு அம்புலன்ஸ்களுடன் பலத்த காயமடைந்த நோயாளிகளை ரஃபா கடவைக்கு அழைத்துச் சென்றது, எனினும் ICRC இன் தலைவர் போரின் போது உதவிகளை வழங்குவது எவ்வளவு கடினமாகிவிட்டது என்பதை வலியுறுத்தினார்.
"இந்த நிலைமைகளின் கீழ் மனிதாபிமான பணியாளர்கள் வேலை செய்ய முடியாது" என்று காசாவில் உள்ள ICRC துணைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் வில்லியம் ஸ்கோம்பர்க் கூறினார்.
"முக்கிய உதவிகள் மருத்துவ வசதிகளை அடைய முடியும் என்பதை உறுதி செய்வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் ஒரு சட்டபூர்வ கடமையாகும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.