தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை : கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளையும் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட பின்னரும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டபின்பும் மீளவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், விடுதலை செய்யக் கோரி போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கையெழுத்து சேகரிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்ற இந்நிகழ்வென்று இன்று சனிக்கிழமை(11.01.2025) மாலை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.
வடக்கு,கிழக்கு தழுவிய கையெழுத்து சேகரிப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக , நீண்ட காலமாகவும் , சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கவுள்ளதாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் இதன்போது தெரிவித்தனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும்
தமது இச்செயற்பாட்டின் மூலம் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |