தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி
நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (28) நாடாளுமன்றில் உரையாற்றும் போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் (Harshana Nanayakkara) இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் குடும்பங்களின் கண்ணீருடனம் கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள்.
தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலே பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றார்கள்.
இந்த நாட்டின் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை உள்ளிட்ட மகுட வாசகங்கள் சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசக்ததை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியற் கைதிளை விடுவிக்குமாறு அவர் தம் உறவுகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
1. தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.
2. மேற்படி தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
3. இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்.
4 .மனிதாபிமான அடிப்படையிலோ ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ இவர்களை விடுதலை செய்ய முடியுமா.
இவ்வாறு 4 கேள்விகளை எழுப்பிய அவர், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர்களையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ஒரு வார காலத்திற்குள் இதற்குப் பூரணமான பதிலை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என உறுதியளித்தார்.
மேற் குறிப்பிட்ட பெயர்களை இன்றைய தினம் எனக்கு வழங்கினால் நான் விசேட கவனம் செலுத்துவதுடன் இதற்குரிய பதிலையும் வழங்குவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
