இலங்கை தொடர்பில் இந்தியாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதனை உறுதிசெய்தே, சிறிலங்காவுக்கான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளதாவது
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வமாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்(G.L.peiris) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். சிறிலங்கா மிகப்பெரிய பொருளதார நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவின் உதவிகளை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார முதலீட்டு முயற்சிகள், கடற்றொழிலாளர் விவகாரம், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தல் உட்பட பல விடயங்கள் பேசப்பட இருப்பதாக சிறிலங்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள உணவுநெருக்கடி, மருத்துவதேவைகள் உட்பட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான இந்தியாவின் உதவிகள் இந்திய தேசத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறிப்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தில் உறுதி செய்யப்பட்ட இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதியில், இடம்பெற்று வரும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள், ஒப்பந்தத்தின் அச்சரத்தினை அழித்து வருவதாக அமைகின்றது.
இந்நிலையில், சிறிலங்காவுக்கான இந்தியாவின் உதவிவழங்கல் என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தினை உறுதி செய்தே வழங்கப்பட வேண்டும் என கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
