30 ஆம் திகதிக்குள் பதவி விலகா விட்டால்.........! - மனுஷ நாணயக்கார சவால்
அரச கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகா விட்டால், பாரிய மக்கள் பேரணியை திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும் , 27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் , 28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் , 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கலவரையும் , 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் பேரணி இடம்பெறவுள்ளது.
எமது பேரணி நிறைவடையும் நாள் வரை அரச தலைவருக்கு கால அவகாசத்தை வழங்குகின்றோம்.
ஏப்ரல் 30 ஆம் திகதியும் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் முதலாம் திகதி பாரிய மக்கள் வெள்ளத்தை திரட்டி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்.
