அதிகரிக்கப்பட்ட பரிசுத்தொகை! போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் (Sri Lanka) உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கான பரிசுத்தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கையை காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) வெளியிட்டுள்ளார்.
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்து வரும் நிலையில், அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் குறித்த பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அயராது உழைக்கும் காவல்துறையினர்
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைக்கவும் மக்கள் உயிரை பாதுகாப்பதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினர் அயராது உழைக்கிறார்கள்.
தொடர்ந்தும் வீதிகள் நிற்பதன் மூலமும், வாகன புகைகளை சுவாசிப்பதன் மூலமும் குறித்த அதிகாரிகள் பல சுகாதார பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள்.
இந்த நிலையில், மாதாந்தம் அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை அதிகரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பரிசுத்தொகைகள்
இதற்கமைய, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் பதவிக்கேற்ப சுமார் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரையில் பரிசுத்தொகைகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், மாதந்தம் 1600 முதல் 1800 ரூபாவை பரிசுத்தொகையாக பெற்றுக் கொள்ளும் அதிகாரிகளுக்கு, இனிவரும் நாட்களில் 6000 ரூபாய் வழங்கப்படும்.
மேலும், காவல்துறையில் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு 1200 ரூபாவாக இதுவரை வழங்கப்பட்ட வெகுமதி தொகை, தற்போது 4000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |