பிரித்தானிய தலைமை போட்டி - ரிஷி சுனக் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவின் ஆளும் கென்சவேட்டிவ் தலைமை மற்றும் பிரதமர் பதவிக்கு தாம் போட்டியிடுவதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் உறுதிசெய்துள்ளார்.
பிரித்தானியா சிறந்த நாடு எனக் கூறியுள்ள ரிஷி சுனக், பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதுடன், கட்சியை ஒன்றிணைத்து, நாட்டிற்கு தேவையான சரியான விடயங்களை மேற்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்
நிதி அமைச்சர் என்ற வகையில் கடினமான தருணங்களில் நாட்டின் பொருளதாரத்தை வழிநடத்தியதாகவும் இதற்கு முன்னர் இருந்ததை விட பாரிய சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை சரிசெய்யும் அதேவேளை, அடுத்த தேர்தல் வரை கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு ரிஷி சுனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஆளும் கட்சியின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடுவோர் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் 100 சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை காண்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுகின்றது.
அந்த வகையில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரின் ஆதரவுடன், இதுவரை 135 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவை ரிஷி சுனக் உறுதி செய்துள்ளார்.
அந்த வகையில் உள்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், சர்வதேச வர்த்தக அமைச்சர் கெமி பட்டநொக், தொழில் மற்றும் ஒய்வூதிய அமைச்சர் சோலி ஸ்மித், கலாசார அமைச்சர் மிச்சேல் டொனெலன்ட் ஆகியோர் ரிஷி சுனக்கிற்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
பொறிஸ் ஜோன்சன்
தலைமைத்துவதற்கு மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் பொறிஸ் ஜோன்சன் 55 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவையும் பென்னி மோர்டென்ட் 23 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர்.
குறிப்பாக அமைச்சர்களான சைமன் கிளார்க், கிறிஸ் ஹீற்ரன்-ஹரிஸ், அலோக் சர்மா, நதீம் ஷஹாவி மற்றும் ஆன் மேரி ட்வெலியன் ஆகியோர் பொறிஸ் ஜோன்சனுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பதவிகளுக்கு மாற்றீட்டாக தலைமைத்துவ வாக்கெடுப்பில் ஆதரவு வழங்குவது தொடர்பான முன்மொழிவை பொறிஸ் ஜோன்சனிடம் முன்வைத்துள்ளதாக வெளியான தகவல்களை பென்னி மோர்டென்ட் நிராகரித்துள்ளார்.
இதுவரை போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளாத பென்னி மோர்டென்ட், கடந்த தலைமைத்துவ வாக்கெடுப்பில் 105 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
