பிரித்தானிய தலைமைத்துவ பதவிக்கு கடும் போட்டி - முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின
முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவுகள்
பிரித்தானியாவின் ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று வாக்கெடுப்பில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
அந்த வகையில் ரிஷி சுனக் 88 வாக்குகளையும், வர்த்தக அமைச்சர் பெனி மோடென்ட் 67 வாக்குகளையும் வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸ் 50 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிடும் 08 பேரில் ஆறு பேர் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஜெரமி ஹன்ட் மற்றும் நதீம் ஷஹாவி ஆகியோர் போதிய வாக்குகளைப் பெறாத நிலையில், அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை இழந்துள்ளனர்.
கெமி பட்டநொக் 40 வாக்குகளையும், ரொம் டுகென்ராட் 37 வாக்குகளையும் சுயெல்லா பிரேவர்மென் 32 வாக்குகளையும் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இன்று அடுத்த சுற்று வாக்கெடுப்பு
இந்த ஆறு வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை அடுத்த சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளனர்.
இறுதிச் சுற்று வாக்கெடுப்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதுடன், அவர்களில் ஒருவரை கட்சியின் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் தலைவராக தேர்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்கெடுப்பு முடிவானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
இதனிடையே நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வி கண்ட ஜெரமி ஹன்ட், முன்னணி வேட்பாளரான ரிஷி சுனக்கிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
