வர்த்தகரிடம் இலட்சகணக்கில் கொள்ளை -காவல்துறை உத்தியோகத்தர் கைது
அநுராதபுரத்தில் இருந்து மிரிஹானவுக்கு வாகனம் கொள்வனவு செய்ய வந்த வர்த்தகர் ஒருவரிடம் ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மிரிஹானவில் விசேட காவல்துறை குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு கான்ஸ்டபிளுடன் சென்ற காவல்துறை சார்ஜன்ட் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சார்ஜன்ட் நுகேகொடை பொது முறைப்பாட்டுப் பிரிவிலும், கான்ஸ்டபிள் நுகேகொட பிரிவு போக்குவரத்துப் பிரிவிலும் கடமையாற்றி வருகின்றனர்.
வாகனம் வாங்க வந்த தொழிலதிபர் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாகன தரகர் தகவல் தெரிவித்ததையடுத்து, அந்த தரகரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 12ஆம் திகதி குறித்த வர்த்தகர் மிரிஹான நகருக்கு வந்து கொண்டிருந்த போது சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் அவர் வந்த வாகனத்தை நிறுத்தி வர்த்தகரை கைவிலங்கிட்டு பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
