சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்..! எச்சரிக்கை விடுத்த மகிந்தவின் மகன்
சிங்கராஜ காட்டுப் பகுதியில் தனக்கு சொந்தமான பங்குதாரர் சொத்து இருப்பதாகவும், அனைத்து சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே அங்கு விடுதி நிர்மாணிக்கப்பட்டது என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக நீதி விசாரணையை ஆரம்பிக்க முடியும் எனவும் ரோஹித ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுடன் இடம்பெற்ற நேர்காணலில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சொகுசு உல்லாச விடுதி
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன், சிங்கராஜா காடுகளுக்கு அருகில் சொகுசு உல்லாச விடுதியொன்றை வைத்திருந்ததாக செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.
அனைத்து தரப்பு போராட்ட இயக்கத்தின் பேச்சாளர் நிராஷன் விதானகே, இதன் உரிமை குறித்த உண்மையைக் கண்டறியுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
உள்ளூர் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி, அந்த உல்லாச விடுதி ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய அவர், முறையான வருமானம் இல்லாத ரோஹித்த ஓர் விடுதியை எவ்வாறு சொந்தமாக வைத்திருக்க முடியும் என ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார்.
அதேநேரம் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கு செல்கிறது என்பதில் கவலை இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் இவை ஆதாரமற்ற மற்றும் பொய்யான கூற்றுகள் என்று குறிப்பிட்ட ரோஹித ராஜபக்ச, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள், தமது தரப்பினர்
மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று
எச்சரித்துள்ளார்.

