கிறிஸ்துமஸ் தினமன்று உக்ரைனை இருளில் மூழ்கடித்த ரஷ்யா!
கிறிஸ்துமஸ் தினமன்று உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்களை க்ரூஸ், பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்கியுள்ளது.
இதனை ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற தாக்குதல் என உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்யா தனது மக்களை இருளில் ஆழ்த்த முயல்வதாகவும் புடின் வேண்டுமென்றே கிறிஸ்துமஸ் தினத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மின்தடை
குறித்த தாக்குதல்களினால் வடகிழக்கு நகரமான கார்கிவில் ஆறு பேர் வரை காயமடைந்துள்ளதுடன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அங்குள்ள ஆளுநர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதிலும் பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக சுமார் அரை மில்லியன் மக்கள் வெப்பமாக்கிகள் (ஹுட்டர்) இல்லாமல் குளிரில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸில் கூட ஓய்வு இல்லாத தாக்குதல்களின் காரணமாக உக்ரைன் மக்கள் மெட்ரோ தொடருந்து நிலையங்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் நோக்கம்
இந்த நிலையில், பலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள்களை பயன்படுத்தி இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மீதான தாக்குதலை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகவும் உக்ரைனின் அனைத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா மேலும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |