உலக நாடுகளை மிரட்டும் ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பு
புதிய தலைமுறை ஆயுதங்களின் தயாரிப்பை தமது நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வடேவ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய உள்ளிட்ட எதிரி நாடுகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மை முழுமையான, அளவான ஒன்றாக மாறுவது குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ள பின்னணியில் திமித்ரி மெத்வடேவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அழிவுதரக் கூடிய ஆயுத தயாரிப்பு
மிகவும் சக்திவாய்ந்தும் அழிவுதரக் கூடியதுமான ஆயுதங்களின் தயாரிப்பை துரிதப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வடேவ் தெரிவித்துள்ளார்.
புதிய கொள்கைகளின் கீழ் இந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாக ரெலிகிராம் செயலி ஊடாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவராகப் பணியாற்றும் திமித்ரி மெத்வடேவ், ஆயுதங்கள் பற்றிய விரிவான விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
தற்போதுள்ள அனைத்து ஏவுகணை பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் முறியடிக்கும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உட்பட புதிய வகை ஆயுதங்களை ரஷ்யா உருவாக்கி வருவதாக அதிபர் விளாடிமீர் புட்டீன் ஏற்கனவே கூறியிருந்தார்.
உக்ரைன் போர்
எனினும் உக்ரைன் போருக்கு நிதி ஒதுக்குவதில் ரஷ்யா அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 30 வீதத்திற்கும் அதிகமான நிதியை தற்காப்பு, பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தும் துறைக்கு ரஷ்யா ஒதுக்கியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதன்காரணமாக ஏனைய துறைகள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ள நிலையில், உக்ரைனின் நிலைகள் மீது ரஷ்யா இன்றும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் இரண்டு மின்சக்தி கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் ஒடேசா மற்றும் அதனை சூழறவுள்ள புறநகரங்களில் உள்ள 15 இலட்சம் மக்கள் மின்சாரம் இன்றி உள்ளதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அத்துடன் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் நடத்திய எறிகணை தாக்குதல்களில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
