செம்மணி வழக்கில் உண்மைகளை புதைக்க முடியாது: தமிழர் தரப்பு ஆதங்கம்
மனிதப் புதைகுழிகளில் நீங்கள் உடலங்களை புதைக்கலாம், ஆனால் ஒருகாலமும் உண்மைகளை புதைக்க முடியாது என செம்மணி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் (Ranitha Gnanarajah) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் தெரிவிக்கையில், ”புதைக்கப்படாத என்புக் கூடுகளும் ஆன்மாக்களும் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
தமது அன்புக்குரியவர்களை தேடி அலைந்தது மாத்திரமின்றி, விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகள் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து மக்கள் களைப்படைந்துவிட்டனர்.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
எனினும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? அவர்களின் பெயர் விபரங்கள், பதவி நிலை என அனைத்து விடயங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்கறிந்துள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்களும், சோதனை சாவடிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டுள்ள என்புக்கூடுகள்
இதற்கான புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகளில் உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டுள்ள என்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளும் பல வருடங்களாக தாமதமாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை கோரி 16 வருடங்களாக பரிதவித்து நிற்கின்றனர்.
சுயாதீன விசாரணைகளின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க விரைவான செயற்பாடுகள் அவசியம்” என சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
