உக்ரைன் இராணுவப் படையில் தமிழக மாணவன்- தீவிர விசாரணையில் உளவுப் பிரிவு!
உக்ரைனில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக, அங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த மாணவன் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவப் பிரிவில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2019 ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார்.
தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை இராணுவ பிரிவில் அவர் இணைந்துள்ளார். இது தொடர்பில் இந்திய மற்றும் தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது.
அவர் உயரம் குறைவாக இருந்ததன் காரணமாக இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், தற்போது உக்ரைன் துணை இராணுவப்படையில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதும் இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தன் மகனை எப்படியாவது மீட்டுக் கொடுத்து விட வேண்டும் என இந்திய அரசுக்கு அவரது பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

