அமெரிக்க - சீன முறுகலில் மூக்கை நுழைக்கும் ரஷ்யா
தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்குவதில் எந்த தவறும் இருப்பதாக தாம் கருதவில்லை என ரஷ்ய செனட்டர் Vladimir Dzhabarov தெரிவித்துள்ளார்.
தாய்வான் விவகாரத்தில் சீனா போருக்கு செல்லும் என்றால், ரஷ்யாவின் ஆதரவு எப்போதும் சீனாவுக்கு உண்டு என அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பையும் மீறி தாய்வான் சென்று திரும்பியுள்ளார்.
தாய்வான் விவகாரத்தில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மிரட்டியது.
இந்த நிலையில் ரஷ்ய செனட்டர் Vladimir Dzhabarov தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கு உதவுவதால், ரஷ்யாவுக்கு ஆதாயம் எனவும், சீனா இந்த விவகாரத்தில் கண்டிப்பாக சிறு உதவியை எதிர்பார்க்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் உதவி இல்லாமல் சீனாவால் அமெரிக்காவை எதிர்கொள்வது கடினம் எனவும் செனட்டர் Vladimir Dzhabarov தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாய்வான் மீது சீனா தாக்குதலை முன்னெடுக்கும் என்றால், அமெரிக்கா களமிறங்கும் நோக்கில் ஜோ பைடன் நிர்வாகம் சமீபத்தில் சட்ட திருத்தம் ஒன்றையும் கொண்டுவந்துள்ளது.
தாய்வானை சீனாவுடன் இணைத்துக்கொள்வது என்பது சீனாவின் தேசிய அடையாளத்தின் முக்கிய பகுதி என்றே கூறுப்படுகிறது. அதன்பொருட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கவும் சீனா தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.