உக்ரைன் விடயத்தில் உதவ வேண்டாம்... பிரான்ஸை எச்சரிக்கும் ரஷ்யா...!
"பிரான்ஸ் உக்ரைனுக்கு இராணுவ வீரர்களை அனுப்பினால், பிரான்ஸ் தனக்குத் தானே பிரச்சினையை உருவாக்கிக் கொண்டதை போன்ற விளைவுகளை சந்திக்க நேரும்" என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், பிரான்ஸ் இந்த பாதுகாப்பு அமைச்சரை தோலைபேசி அழைப்பில் எச்சரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இந்தப் போரில் அமெரிக்கா உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன, உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.
ராணுவ வீரர்கள்
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கத்தய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார், இதன் வாயிலாக தேவைப்பட்டால் பிரான்ஸ், உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னு உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது செர்கெய் "பிரான்ஸ் அதிபர் மக்ரான் ஏற்கனவே அறிவித்ததன்படி, அதனை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாக அமையும்" என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி
மேலும், "உக்ரைன் மேற்கத்தய நாடுகளின் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை, பிரான்ஸ் உக்ரைனுக்கு உதவுவதாக சிறப்பு வேலைகளில் ஈடுபடாது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பின்னர் மேற்கத்தய நாடுகள் ரஷ்யாவுடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள நிலையில் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் நீண்ட கால இடைவெளிக்குப்பின் அரிதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடன் மீண்டும் பேசியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்களும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |