உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய படைகள் கொடூரம் - பெண்கள் ,சிறுமிகள் பாலியல் வன்கொடுமை
உக்ரைனின் புச்சா நகரில் தாங்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக, 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் கூறியுள்ளதாக, மூத்த உக்ரைன் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உக்ரைன் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் லியூட்மிலா டெனிசோவா கூறுகையில், இது தொடர்பான உதவி எண்ணுக்கு வந்த புகார்களில், 14 முதல் 24 வயதுக்குட்பட்ட குறைந்தது 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் ரஷ்யப்படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
"உக்ரைன் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள்", இராணுவ குற்றங்கள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது ரஷ்யப் படையினரின் "புதிய ஆயுதம்" எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "மொத்தமாக 14-24 வயதுக்குட்பட்ட 25 பெண்கள் மற்றும் குழந்தைகள் ரஷ்யப்படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர். "கடந்த ஒரு மாதமாக இது நடைபெற்று வருகிறது.
இந்த மோசமான குற்றங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறோம், ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும்," என தெரிவித்தார்.
புச்சா நகரில் இத்தகைய கொடுமைகளை இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
