ஈ கூட தப்பிக்கக் கூடாது!! ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு
உக்ரைனின் மரியுபோல் நகரில் மீதமாக உள்ள உக்ரைன் படையினர் மறைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் உருக்கு தொழிற்சாலையை தாக்கும் திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் மீளெடுத்து உத்தரவிட்டுள்ளார்.
எனினும் ஒரு ஈ கூடத் தப்பிக்க முடியாதவாறு, தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை முழுமையாக தடைசெய்யுமாறு பாதுகாப்பு அமைச்சர் ஊடாக ரஷ்ய அதிபர் பணித்துள்ளார்.
உக்ரைனின் தென் பிராந்தியத்தில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் நகரில் உள்ள அசஸ்தவ் உருக்கு தொழிற்சாலையானது, ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.
இந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் பாரிய விரிவான நிலத்தடி பதுங்குழி உள்ளதுடன், ரஷ்ய படையினருக்கு எதிராக போராடி வந்த தீவிர வலதுசாரி போராளிகளும் உக்ரைனின் கடற்படையினரும் தற்போது அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்ய படையினரின் முற்றுகைக்கு மத்தியில் 10 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலுள்ள இந்த மிகப் பெரிய தொழிற்சாலை வளாகத்திற்குள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர் மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மிகவும் மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் சுமார் ஆயிரம் பொதுமக்களும் குறித்த தொழிற்சாலை வளாகத்திற்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷொய்கு உடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த தொழிற்சாலையை முழுமையாக முடக்குமாறு விளாடிமீர் புட்டீன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தொழிற்துறைப் பகுதியை தாக்குவது நடைமுறைக்கு மாறானது என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். மரியுபோல் நகரில் உள்ள அசஸ்தவ் உருக்கு தொழிற்சாலையைத் தவிர, ஏனைய அனைத்துப் பகுதிகளையும் தமது படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷொய்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மரியுபோல் நகரை கைப்பற்றும் ரஷ்ய படையினரின் வெற்றிகரமான நடவடிக்கைக்கு விளாடிமீர் புட்டீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
