இந்த நடவடிக்கைக்கு நிதி அமைச்சர் வெட்கப்படவேண்டும் - ருவன் விஜேவர்தன
ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியங்களிடமிருந்து 25 சதவீதம் வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் நிதி அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களின் மீது வரிமேல் வரி சுமையை சுமத்திக் கொண்டிருக்கிறது. தற்போது விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வட் வரிக்கு சமாந்தரமானதாகும். இதன் மூலம் சேமிக்கப்படும் பணம் நிதி அமைச்சின் கணக்கிற்கே செல்லும்.
வழமையாக வரி வருமானம் திறைசேரிக்கே செல்லும். ஆனால் இங்கு நிதி அமைச்சிற்கு செல்கிறது. இதில் சந்தேகம் நிலவுகிறது. மறுபுறம் வட் வரி அறவிடப்படும் நிறுவனம் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக அதிகாரசபை வரி சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக் 25 சதவீதம் கூடுதல் கட்டணத்தைச் சேர்த்து நிதி அமைச்சினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட முக்கிய நிதியங்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊழியர் சேமலாப நிதியம் என்பது சாதாரணமான நிறுவனங்களைப் போன்றதல்ல. அதிக இலாபம் ஈட்டும் நிதியமாக இதனைக் கருதலாம். இங்கு 3 டிரில்லயன் ரூபாய்க்கும் அதிக நிதி காணப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கப் பெறும் இலாபம் மாத்திரம் 250 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.
தற்போது அரசாங்கத்திடம் நிதி இன்மையால் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. வரி மேல் வரி சுமத்துவது அடுத்த தேர்தலுக்கான நிதியை சேகரிப்பதற்காகும்.
அத்துடன் பொருட்களின் விலைகளில் பாரியளவில் அதிகரித்துள்ளமையால் மக்களுக்கு வாழக் கூடிய சூழல் இல்லை. ஐ.ஓ.சி. எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிக்கும்.
ஆனால் அரசாங்கம் இதனை விலை அதிகரிப்பு என்று கூறாமல் , ஐ.ஓ.சி.யின் விலைக்கு சமாந்தரமாக விலை சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறும். எரிபொருள் தட்டுப்பாடு தீவிர நிலைமையை அடைந்துள்ளது. எதிர்வரும் 7 நாட்களுக்கு போதுமான எரிபொருளே நாட்டில் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதை விட சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய்யை இறக்குமதி செய்வது சிறந்ததாகும் என்று அமைச்சர் கூறுகின்றார். அவ்வாறு செய்தால் உள்நாட்டு சுத்தீகரிப்பிற்கு என்னவாகும்? சுத்தீகரிப்பு நடவடிக்கைகளால் விமானத்திற்கான எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு என்பன கிடைக்கப் பெறுகின்றன.
தற்போது அதனை நிறுத்தினால் மண்ணெண்ணையையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். ஒரே நாளில் சேதன உரப்பாவனையை ஊக்குவிப்பதாகத் தெரிவித்து விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர். தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்குவதாகக் கூறுகின்றனர்.
அவ்வாறெனில் பாதிக்கப்பட்ட ஏனைய விவசாயிகளுக்கு என்ன தீர்வு? விளைச்சல் இன்மையின் காரணமாக அரிசி , தேங்காய் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
