கொல்லப்பட்ட அலி லாரிஜானிக்கு பதில் அடுத்த நியமனம்...! ஈரானின் அடுத்த நகர்வு
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லாரிஜானிக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் செயலாளர் சயீத் ஜலிலி தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, கவுன்சிலுக்கான தனது பிரதிநிதிகளை அதிகாரப்பூர்வமாக நியமிக்கும் வரை இந்தத் தற்காலிக ஏற்பாடு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தெரியவருகையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் உதவியாளர் ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு கவுன்சில்
இந்தநிலையில், அரசாங்கத்திற்குள் லாரிஜானி வகித்த மிக முக்கியமான பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்துத் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.
உயிரிழந்த அலி லாரிஜானி, முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியால் சயீத் ஜலிலியுடன் இணைந்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், அதிகாரப்பூர்வமான நியமிப்பு இடம்பெறும் வரை, சயீத் ஜலிலி தற்காலிகமாக அலி லாரிஜானியின் பொறுப்புகளைக் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பக் கவுன்சிலுக்குள் முறையான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |