மக்கள் சேவையே முக்கியம் - சலுகைகள் தேவையில்லை - சஜித் பிரேமதாச
மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சுப் பதவிகளோ வரப்பிரசாதங்களோ தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இவ்வாறு கூறிய அவர், தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுவும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம்.
மக்கள் சேவையே முக்கியம்
நாட்டின் ஜனநாயக வரலாற்றில் பாரம்பரிய எதிர்க்கட்சிக்கு அப்பால் சென்று, அரச அதிகாரம் இருந்தோ - இல்லாமலோ மக்கள் சமூகத்தை பலப்படுத்த தற்போதைய எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளது.
இதற்காக எமக்கு அமைச்சுப் பதவிகளோ, சலுகைகளோ தேவையில்லை. எதிர்க்கட்சியில் இருந்தாலும், சலுகைகளை பொருட்படுத்தாமல் நாம் மக்களுக்காக முன் நிற்போம்.
ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கிறது.
அரசியல் சூதாட்டம்
சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை இலக்காகக் கொண்டு சமூக நல மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இருந்த எதிர்க்கட்சிகள் அரச அதிகாரத்தைப் பெறுவது போன்ற அரசியல் சூதாட்டத்தில் தான் ஈடுபட்டன என்றார்.

