மக்களை மிதிக்கும் அரசாங்கத்தை விரட்டி புதுயுகம் படைப்போம் - சஜித் பிரேமதாச
மக்களை காலில் போட்டு மிதிக்கும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டி, சாதாரண மனிதனும் கோலோச்சும் யுகத்தை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாழ்க்கையை அழிக்கும் யுகம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “டீசல் முதல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தி, மின் கட்டணத்தை 250 சதவீத்தால் உயர்த்தி, வட்டி விகிதத்தையும் அதிகரித்து, நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் யுகத்தையே தற்போதைய அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
சகலத்தையும் வெட்டி வீழ்த்தும் தற்போதைய அரசாங்கம் விரட்டப்பட்டு, சாதாரண மனிதனும் கோலோச்சும் யுகம் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் தங்களைப் பற்றியும் தங்களின் இருப்பு, பிழைப்பு மற்றும் தங்களின் நண்பர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது.
நாட்டை வங்குரோத்தாக்கி அதிபரை நியமித்த 134 எம்.பி.க்களை பற்றித் தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுகபோகமாக கழித்து வருகின்றனர்.
அதிபர் தேர்தல்
பதவிக்காலம் முடியும் வரை அதிபர் தேர்தலை நடத்த மாட்டேன் என தற்போதைய அதிபர் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு இந்நாட்டின் 220 இலட்சம் மக்களை மறந்துபோனாலும் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் சாதாரண மக்களை மறக்கவில்லை.
பலமான திட்டத்தின் ஊடாக குழுவாக மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரே மாற்று அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமே. இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெளிவான பதில்கள் இருக்கின்றன.
இந்த நாட்டின் 75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் செய்யாத பணியை கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றியுள்ளது.
அரச அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே” - என்றார்.
