ரணிலுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..! சஜித் தீர்மானம்
பயனளிக்கும் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று (19) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே சஜித் பிரேமதாச இந்த விடயத்தினை தெரிவித்தார்.
அமைச்சு பதிவுகளை ஏற்க போவதில்லை

அவர் மேலும் தெரிவிக்கையில், வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும், அரசாங்கம் கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும் எனவும், ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன் எனவும் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.