யானை, மொட்டு அரசை விரட்டியடிக்க வேண்டும் - சஜித்
2019 ஆம் ஆண்டு போன்று மீண்டும் ஏமாறக் கூடாது எனவும், அவ்வாறு செய்தால் நாடு அழிவின் விளிம்புக்குச் செல்வதை தடுக்க முடியாது போகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கம்பளை நகரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,
“பொருட்களின் விலையை அதிகரிப்பது, வரிச்சுமையை அதிகரிப்பது, உரங்களின் விலையை அதிகரிப்பது போன்றனவற்றைச் செய்யவே இந்த அரசாங்கத்திற்கு தெரியும்.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வை அழித்த யானை, காகம், மொட்டு அரசை நாம் விரட்டியடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட குழுவினர் தம்மால் நன்றாக செய்ய முடியும் என்று நாடு முழுவதும் இறுமாப்பு பேசி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு நன்றாகச் செய்வதாகக் கூறி வந்தவர் முழு நாட்டையும் அழித்தார்.
அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே எனக்கூறித் திரியும் அந்தச் சிவப்பு நிற சோசலிசவாதிகள்,71 மற்றும் 88 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடுகள் எரிக்கப்பட்டு, மக்கள் கொல்லப்பட்டு, உத்தரவுகள் மூலம் நாட்டை ஆண்ட காலத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
திருடர்களைப் பிடிப்பதாகக் கூறும் சிவப்பு சகோதரர்கள், 2005 ஆம் ஆண்டு ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்ததில் இருந்து அவர்கள் பிடிக்கப்போகும் திருடர்கள் ஒருவருமில்லை” - என்றார்.