கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் - சஜித் சபதம்!
உங்களால் முடியாதென்றால் நாட்டை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் நாங்கள் செய்து காட்டுகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காலிமுகத்திடல் மற்றும் அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவருமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பேரணியில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கத்தை வீட்டிற்குச் செல்லுமாறு கூறவே மக்கள் அனைவரும் கொழும்பிற்கு வந்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வரையில் நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஹர்ஷ டி சில்வா கூறுகையில், டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக இருக்கும் போதே இந்தப் பிரச்சினையை தீர்த்திருக்கலாம் எனினும் இன்று பிற்பகலாகும் போது டொலரின் விலை 280 ரூபாவாக மாற்றமடையுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சம்பிக்க ரணவக்க உரையாற்றுகையில், நீங்கள் செய்தது போதும், வீட்டிற்குச் செல்லுங்கள் என்ற விடயத்தைக் கூறவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
