அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க சஜித் தரப்பு அழைப்பு
தனிப்பட்ட அரசியல் பாகுபாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம்
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
தனிப்பட்ட அரசியல் பாகுபாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்றும், ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் ஆணையைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி, மக்களின் ஆணையைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தமது கட்சி முன்மொழிவதாக கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறு பல குடிசார் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுஜன பெரமுனவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டார்.
