அமெரிக்க வரியில் நிவாரணம்: அநுர அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதித்த வரிகள் தொடர்பாக ஒரு நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்க தேவையான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு ஒப்பந்தம்
அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த புதன்கிழமை (ஜூலை 9) க்கு முன்னர் நாட்டிற்கு சமர்ப்பிக்கப்படும் என அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கான 90 நாள் வரிச் சலுகை அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய வரிகள் தொடர்பாக இலங்கை அமெரிக்காவுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்தியது, மேலும் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி விதிப்பு
இதேவேளை, ஏற்றுமதி சந்தை பாதிக்கப்படாது என்றும், தற்போதைய சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட வர்த்தக முதலீடுகள் மற்றும் அமெரிக்காவுடன் புதிய உறவுகளை ஏற்படுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது வரி விதிப்பு கடிதங்களை தொடர்புடைய நாடுகளுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
