அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : வெளியான அதிர்ச்சி தகவல்
அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் பெரிய பொருளாதார மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியாது எனவும், அடுத்த வருடம் தற்போதைய நிலையை விட கடினமாக இருக்கலாம் எனவும், எனவே அடுத்த வருடத்தில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம்
அதிக பணம் மீள்செலவினமாக (recurring expenditure) வைத்திருக்க வேண்டியுள்ளது எனவும், சம்பளத்திற்காக 1,107 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படி ஓய்வூதியம் ஓரளவு அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.
1,400 பில்லியன் கடன் மற்றும் வட்டி கொடுப்பனவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடினமான ஆண்டாக 2024
அடுத்த வருடம் (2024) அரச வருமானம் 4,127 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும், 3,820 பில்லியன் ரூபாவை வரியாகப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, வரும் ஆண்டு தற்போதைய சூழ்நிலையை விட கடினமாக இருக்கும் என்றும், மக்கள் தங்கள் வருமானத்தின் முக்கிய பகுதியை நேரடி அல்லது மறைமுக வரிகளாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)