மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: நாடாளுமன்றில் வலுக்கும் எதிர்ப்புகள்
சிறிலங்கா மத்திய வங்கியின் ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென சிறிலங்கா துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தை தொடர்ந்து, இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு
இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் அதிக ஆதிக்கத்தை செலுத்தும் நாடாளுமன்றம், சிறிலங்கா மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென சிறிலங்கா துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பான சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல விமர்சித்துள்ளார்.
சிறிலங்கா மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் சம்பளம் கடந்த ஆண்டு 1.6 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண தொழிலாளரின் சம்பளம்
எனினும், சாதாரண தொழிலாளர் ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய் மாத்திரம் சம்பளமாக வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தால் செலுத்தப்படுவதில்லை எனவும் மத்திய வங்கியின் கணக்கில் இருந்து அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |