இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தின் குறைபாடுகள் : ரணிலிடம் சமந்தா பவர் கோரிக்கை
சிறிலங்கா அரசாங்கத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் நடைமுறை காரணமாக பொது மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவழி மூலம் நேற்று (13) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்துக்கு எதிராக பலர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்ததோடு, இது தொடர்பில் பலர் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
அமெரிக்கா அதிக அக்கறை
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் நடைமுறை காரணமாக ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் அறிவுறுத்தியுள்ளார்.
இருவருக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இணையவழி சந்திப்பின் போது, இலங்கை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கான உரிமை தொடர்பில் அமெரிக்கா அதிக அக்கறை கொண்டுள்ளதாக சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளதாரம்
அத்துடன், டிஜிட்டல் பொருளதாரத்துக்கான முதலீடுகள் தொடர்பில் ஆராயுமாறு ரணில் விக்ரமசிங்கவை அவர் ஊக்குவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பிலும் இருவருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித் திட்டம், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதன் அர்ப்பணிப்பையும் சமந்தா பவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |