சம்பந்தனுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை - 3 மாதம் விடுமுறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து 3 மாத காலத்துக்கு விடுமுறையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
89 வயதான இரா.சம்பந்தனின் உடல் நிலை அண்மைக்காலமாக சீராக இல்லாத நிலையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை கோரிக்கை
இரா.சம்பந்தனின் கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று இந்த விண்ணப்பத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் சமர்ப்பித்ததையடுத்து, அவருக்குரிய விடுமுறை கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் திருக்கோணேஸ்வர ஆலய சூழலை சிங்கள வியாபாரிகள் ஆக்கிரமிப்பது போன்ற பேரினவாத நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் அந்தப் பகுதியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த விடயங்களையும் அதேபோல, திருகோணமலை வாழ் தமிழ் மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை முறையாக கையாள்வதிலும் இரா.சம்பந்தன் பலவீனமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று மாத காலத்துக்கு பங்குபற்ற முடியாதபடி புதிய நிலைமை எழுந்துள்ளது.
இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இருந்து விலகி அந்த இடத்தை வேறு ஒருவருக்கு வழங்கவேண்டும் என்ற கருத்தும் தமிழரசுக் கட்சியில் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.