சில மரணங்கள் சுமை நீங்கியதாக மகிழ்வை தருகிறது : சம்பந்தரின் மரணம் பற்றி பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர்
பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) மரணத்தின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளதாவது,
இறந்தவர்களை தெய்வங்களாகவும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களை புனித பிரதேசமாகவும் பூசிக்கும் வரலாற்று மரபிற்கு சொந்தக்காரர்கள் தமிழினம்.
இன்றும் நாம் இறந்தவர்களின் நீதிக்காக கண்ணீர் வடிக்கிறோம் அந்த கண்ணீர் விடும் உரிமைக்காகவும் சேர்த்து போராடுகின்றோம்.
எனினும் சில மரணங்கள் சுமை நீங்கியதாக மகிழ்வை தருகிறது. நரகாசூரன் வதத்தை இன்றும் தீபாவளியாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
உலகிலே ஆளும் கட்சியால் உருவாக்கப்பட்ட அதிசயமான எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியோடு, உல்லாச ஆடம்பர வாழ்க்கைக்காகவும் ஈழத்தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏக்கிய இராச்சியத்துக்குள்ளும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் காலுக்குள்ளும் போட்டு மிதித்தவனின் மரணம்.
ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி தரும் செய்தி தான் என்பதை சம்பந்தனின் மரணம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வோடு சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பதிவுகளே சாட்சியாகின்றன.
கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோர் தென்னிலங்கையின் முகத்துடனேயே தமிழ்த் தேசியத்தை கருவறுக்கும் வேலை செய்தார்கள். எனினும் சம்பந்தனோ தமிழ்த் தேசிய முகமூடியை அணிந்துகொண்டு தமிழ் சமூகத்திற்குள் ஆழவேருன்றிக்கொண்டு தமிழினத்தை கருவறுப்பதையே தனது முழுநேர பணியாகச் செய்திருந்தார்.
கதிர்காமர், நீலனை கூட புனிதமாக்குகிறது சம்பந்தனின் துரோகம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனும் மணிமுடி தரித்து அழகு பார்த்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரானவர்களின் பட்டியலில் நானும் இருந்தேனென சிங்கள நாடாளுமன்றத்தில் தெரிவித்து சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடைநீடிப்புக்கு உரமூட்டி சிங்களத்தின் எல்லை தாண்டிய அனைத்துலக சட்டப்போராட்டத்திற்கும் இறுதிவரை துணைநின்றதை எப்படி நாம் மறக்க முடியும்?
சம்பந்தனின் பங்களிப்பு
சம்பந்தனின் மரணச் செய்தியை தமிழர்கள் அறிய முன்னரே சிங்களத் தலைவர்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கைகளே அவரின் துரோகத்தின் ஆழத்திற்கு சாட்சியாகிறது.
சர்வதேச விசாரணை என்ற விளிம்பிலிருந்து தமிழர்களின் நீதிக்கான கோரிக்கைளை சிறிலங்காவின் நீதிப்பொறிமுறைக்குள் இழுத்துவருவதில் சம்பந்தனின் பங்களிப்பை காலம் கடந்தும் சிங்கள தேசம் நிச்சயம் நினைவுகூரும்.
சிங்கள மந்திரிமாரே பௌத்தத்தை அரச மதமாகவும், ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியை கனவு காணக்கூடிய சம்பந்தன் காலமே தமக்கு சாதகமான காலமென மகிழ்ந்தார்கள். நிச்சயம் அந்த மகிழ்ச்சி மறைவது அவர்களுக்கு கவலையே. எனினும் கவலைப்படாதீர்கள் சுமோ கவலை தீர்ப்பார் .
மரணம் நெருங்கிய இறுதி நாட்களிலும்,முள்ளிவாக்கால் சுடுபுழுதியிலே கொத்துக்குண்டுகளால் கருகிப்போன எமது ஈழத்தமிழ் குழந்தைகளின் மரணத்திற்கு நீதிகேட்க வேண்டும் என்று நினைக்காத 91 வயது முதியவரின் மரணம் காலம் தாழ்ந்து விட்டதோ என்று தமிழ் சமூகம் எண்ணுவதோடு, ஒரு தமிழ்த் தலைவர் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் சம்பந்தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
ஈழத்தமிழனின் கண்ணீர்
தமிழினம் தியாகத்துக்கு சமாந்தரமாக துரோகத்துக்குள்ளும் சிக்கி சின்னபின்னமாகியதே வரலாறு. இன்று உயிரோடு இருக்கும் வரை சம்பந்தனை ஓய்வு பெறச் சொன்னவர்களும், துரோகி என்று வசை பாடிய சிலரும் உயிரற்ற சம்பந்தனை புனிதராக்கி நாகரீகம் கற்பிக்கிறார்கள் எனக்குள்ள ஒரே கேள்வி உயிரோடு இருக்கும்போது ஒருவர் துரோகியாகவும், உயிரற்ற பின்னர் அவர் தியாகியாகவும் பார்க்கும் சூத்திரத்தை நான் அறியேன் என்னை பொறுத்தவரை துரோகமும், தியாகமும் அவர் தம் வாழ்வே தீர்மானிக்கிறது.
கவிஞர் தாமரை கூறியது போல் மரணங்கள் யாரையும் யோக்கியன் ஆக்குவதில்லை சம்பந்தனின் மரணக் கொண்டாட்டத்தை அவரே தீர்மானித்துள்ளார்.
அந்தவகையில் சம்பந்தனின் துரோகம் மரணத்தால் புனிதம் அடையப்போவதில்லை. இன்னுமொரு சம்பந்தனை சுமோ உருவில் செதுக்கிவிட்டே அய்யா தூங்கியுள்ளார்.
மரணத்தின் பின்னும் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று கருதியவருக்காய் எவ்வாறு ஈழத்தமிழனின் கண்ணீர் சிந்தும்?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |