சம்பந்தனின் ஆசையை கனடாவில் பகிரங்கப்படுத்திய அனுர
நான் இலங்கையன் என்பதனை இந்த உலகிற்கு சத்தமிட்டுக்கூற ஆசை படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தம்மிடம் கூறியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசமான கனடாவில் இலங்கையர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், “"சம்பந்தனுடைய சில அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒருநாள் சம்பந்தன் என் கைககளைப் பிடித்துக் கொண்டு "அநுர, நான் இலங்கையன் என்பதனை இந்த உலகிற்கு சத்தமிட்டுக்கூற ஆசை படுகின்றேன், ஆனால் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜை என கூறிக்கொள்ள நான் விரும்பவில்லை.” என கூறினார்.
அமைச்சுப் பதவி
அது நியாயமானது அல்லவா. முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என்னிடம் “என்னால் இந்த நாட்டில் செல்லக்கூடிய அதிகபட்ச தூரத்தை நான் அடைந்து விட்டேன். நான் அமைச்சுப் பதவியின் மூலம் அதனை அடைந்து விட்டேன்.” என்றார்.
ஜெயராஜின் இனத்துவ அடிப்படையில் அவரினால் இந்த நாட்டில் அமைச்சராக மட்டுமே பதவி வகிக்க முடியும் என உணர்ந்தால் அது நியாயமானதல்ல. அதிபராக முடியுமா பிரதமராக முடியுமா என்பது வேறு கதை.
இரண்டாம் தரப் பிரஜை
எனினும், ஒருவர் தனது இனம், மதம், கலாச்சாரத்தின் அடிப்படையில் ஓர் பதவியை அடையவே முடியாது என கருதும் சூழ்நிலையானது ஆரோக்கியமானதல்ல. நாம் என்ன கூறினாலும், உனக்கு என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினாலும், ஒருவர் தான் இரண்டாம் தரப் பிரஜை என உணர்ந்தால் இந்த நாட்டில் ஏதோ ஓர் பிரச்சினை இருக்கின்றது என்பது நிதர்சனமானது.
அரசியலில், அரசியல் சந்தர்ப்பங்களில் நியாயமான முறையில் இணைந்து கொள்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.” என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |