சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டுமென சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தியில் முதலீடு, சேமிப்பு, நுகர்வு போன்றவை இருப்பதாகவும்,இவ்வாறு சேமித்த பணத்தில் கோடிக்கணக்கில் பெறப்பட்டு 5000 ரூபா அளவில் கொடுப்பனவு கோவிட் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு தொகுதி வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டம்
அஸ்வெசும திட்டத்தை எடுத்துக் கொண்டால்,அது விஞ்ஞானபூர்வமற்ற, தரவு அடிப்படையில் அல்லாத, புள்ளிவிபரவியல் ரீதியாக அணுகப்படாத திட்டம் என குறிப்பிடலாம்.
இதற்குக் காரணம், குடும்ப அலகின் வருமான செலவீன கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வறுமைக் கோடு சரியாக அடையாளப்படுத்தப்படாது தன்னிச்சையாக ஒரு பகுதியினர் எடுத்த முடிவே என்றும் அவர் தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டத்தில் 200 மில்லியன் டொலர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும்,இதில் மக்களுக்கு நலன் மேம்பாடும் நன்மையும் இடம்பெறவில்லை.
இது வெறும் பணம் வழங்கும் செயற்பாடே என்றும், பணத்தைப் பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப பணத்தைக் கொண்டு என்ன செய்வது என்பது தீர்மானிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி வேலைத்திட்டம்
ஆனால் சமுர்த்தி வேலைத்திட்டம் இதற்கு மாற்றமானது என்றும், இது சமூகப் பாதுகாப்பு, மற்றும் மக்கள் நலன் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகவும், அது நூறு சதவிகிதம் சம்பூர்ணமானது இல்லை.
1994 இல் இருந்து இப்போது வரை இதில் ஏராளமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் அதன் பயனாளிகளுக்கு சொந்தமானது என்றும், இங்குள்ள சமூக பாதுகாப்பு காரணமாக எந்த பயனாளியும் அதை நீக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாக சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டுமென சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் குழுவில் கலந்து கொண்டு அஸ்வெசும வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.