தையிட்டி விவகாரத்தில் கருணா, பிள்ளையான் வழியில் சாணக்கியன் ?
தையிட்டி போராட்டம் என்பது தமிழ் இனம் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நடத்தி வருகின்ற ஒரு போராட்டம்.
தமிழ் மக்களின் இனப்பலரம்பலுக்கு இடையூறுவிளைக்கும்படியான ஒரு நடவடிக்கைக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு மேற்கொண்டு வருகின்ற ஒரு போராட்டம்.
ஆனால் அந்தப் போராட்டத்தில் கிழக்கில் இருந்து யாரும் வந்து கலந்துகொள்ளவில்லை என்பது ஒரு பெரிய நெருடலாகவே இருக்கின்றது.
குறிப்பாக தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் இருக்கின்றார்கள். அவர்களில் யாருமே இதுவரை தையிட்டி போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. குறைந்தது ஒரு கண்டண அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.
தமிழ் தேசியம் பேசுகின்ற சாணக்கியன் தான் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவர். தமிழ் தேசியம் என்பதன் அடிப்படையே வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தான். அந்தத் தமிழர் தாயகத்தில் எங்கே தமிழர்களுக்கு அநீதி இளைக்கப்பட்டாலும், அந்த இடத்தில் சென்று குரல் கொடுப்பது தான் தமிழ் தேசியவாதிகளின் கடமை.
மயிலத்தமனை பிரச்சனையாக இருக்கட்டும், வேறு பல போராட்டங்களாக இருக்கட்டும் வடக்கில் இருந்து தமிழ் தேசியத் தலைமைகள் கிழக்குக்கு சென்று தேசிய இன ஒற்றுமையை வெளிப்படுத்தும் கலாச்சாரம் காலாகாலமாக இருந்துவருகின்றது.
அதேபோன்று வடக்கில் நடக்கின்ற போராட்டங்களுக்கு கிழக்கில் இருந்து சாரை சாரையாகச் சென்று தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்திய காரியங்களும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
வடக்கில் நடக்கும் பிரச்சனைக்கு கிழக்கில் இருந்து யாரும் செல்லத்தேவையில்லை என்கின்ற கோட்பாடு பிள்ளையானுடைய கோட்பாடு. கருணாவினுடைய நிலைப்பாடு. அதனைத்தான் பிரதேசவாதம் என்று கூறுவது.
சாணக்கின் பிள்ளையான் வழியில் பிரதேசவாத நிலைப்பாட்டை எடுக்கின்றாரா என்ற கேள்வியை இந்த இடத்தில் எழுப்பவேண்டி இருக்கின்றது.
தமிழ் தேசியத்தின் அச்சானியாக இருக்கின்ற வடக்கையும் கிழக்கையும் நிலத்தாலும், உணர்வாலும் பிரிக்கின்ற எத்தனங்களை பல தசாப்தகாலமாகச் செய்துவருகின்றது பேரினவாத இயந்திரம். அந்தப் பேரினவாதத்தின் வேட்கைக்குத் தீனிபோடுகின்ற காரியம்தான் சாணக்கியன், பிள்ளையான், கருணா போன்று பிரதேசவாத கருத்துருவாக்கத்துக்குள் சிக்குப்பட்டு நிற்பது.
பிரதேசவாத நிலைப்பாடு எடுப்பது உங்களுடைய உரிமைதான். அதற்குள் நாங்கள் வரவில்லை. ஆனால் தயவுசெய்து தமிழ் தேசியம் என்று பேசுவதை மாத்திரம் இனி விட்டுவிடுங்கள்.
கருணா போல, பிள்ளையான் போல தாராளமாகச் செயற்படுங்கள்.
பேரினவாதத்தின் செல்லப்பிள்ளையாக நடந்துகொள்ளுங்கள்.
நாங்கள் எதுவுமே கேட்கமாட்டோம்.
ஆனால் தயவுசெய்து கருணா போல, பிள்ளையான் போல பகிரங்கமாகச் சொல்லிவிட்டுச் செய்யுங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்